உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / வடகிழக்கு அணி அபாரம்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

வடகிழக்கு அணி அபாரம்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த வடகிழக்கு யுனைடெட் அணி 5-0 என ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.துவக்கத்தில் இருந்தே வடகிழக்கு அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். அலாதீன் அஜராய் (5வது நிமிடம்), பார்திப் சுந்தர் கோகோய் (44வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, முதல் பாதி முடிவில் வடகிழக்கு அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் அசத்திய வடகிழக்கு அணிக்கு கோகோய் (55வது நிமிடம்), மகார்டன் லுாயிஸ் நிக்சன் (82வது), அஜராய் (90வது) தலா ஒரு கோல் அடித்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய ஜாம்ஷெட்பூர் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் வடகிழக்கு அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.வடகிழக்கு அணி 6 போட்டியில், 2 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது தோல்வியை பெற்ற ஜாம்ஷெட்பூர் அணி (4 வெற்றி, 12 புள்ளி) 2வது இடத்தில் நீடிக்கிறது. கோல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் முகமதன், ஐதராபாத் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஐதராபாத் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ