அர்ஜுன்-இளவேனில் அபாரம்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் தங்கம்
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அர்ஜுன், இளவேனில் ஜோடி தங்கம் வென்றது.கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா (317.7), இளவேனில் (316.3) ஜோடி, 634.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. பைனலில் அர்ஜுன், இளவேனில், சீனாவின் டிங்கே லுா, ஜின்லு பெங் ஜோடியை 17-11 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.ஆண்கள் அணிகள் பிரிவில் (10 மீ., 'ஏர் ரைபிள்') பிரிவில் அர்ஜுன், ருத்ராங்க் ஷ், கிரண் ஜாதவ் அடங்கிய இந்திய அணி தங்கம் கைப்பற்றியது.ஜூனியர் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஷாம்பவி, நரேன் பிரனவ் ஜோடி 16-12 என, சீனாவின் ஹுய்கி, யினன் ஹான் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.