ஆசிய ஹாக்கி: இந்தியா கோல் மழை
ராஜ்கிர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் கோல் மழை பொழிந்த இந்திய பெண்கள் அணி 13-0 என தாய்லாந்தை வீழ்த்தியது.பீஹாரில், பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 7வது சீசன் நடக்கிறது. இந்தியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்கின்றன.தீபிகா 5 கோல்: லீக் போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் தீபிகா, 'ஹாட்ரிக்' உட்பட 5 கோல் (3, 19, 43, 45, 45+வது நிமிடம்) அடித்தார். பிரீத்தி (9, 40வது நிமிடம்), லால்ரெம்சியாமி (12, 56வது), மணிஷா (55, 58வது) தலா 2 கோல் பதிவு செய்தனர். பியூட்டி (30வது), நவ்னீத் கவுர் (53வது) தலா ஒரு கோல் அடித்தனர்.முதலிரண்டு போட்டியில் மலேசியா (4-0), தென் கொரியாவை (3-2) வீழ்த்திய இந்திய அணி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. புள்ளிப்பட்டியலில் சீனா (+21 கோல் வித்தியாசம்), இந்தியா (+18) தலா 9 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றன. இந்திய அணி, தனது 4வது லீக் போட்டியில் நாளை சீனாவை எதிர்கொள்கிறது.மற்ற லீக் போட்டியில் மலேசியா (2-1, எதிர்: தென் கொரியா), சீனா (2-1, எதிர்: ஜப்பான்) அணிகள் வெற்றி பெற்றன.