ஆஸ்திரேலிய வீரர் சஸ்பெண்ட்
சிட்னி: பாரிசில் போதைப்பொருள் வாங்க முயற்சித்த ஹாக்கி வீரர் கிரெய்க், 12 மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் முன்னணி வீரர் தாமஸ் கிரெய்க் 29. இதுவரை 101 போட்டிகளில் பங்கேற்று, 29 கோல் அடித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார். கடந்த ஆக. 7ம் தேதி இரவு, பாரிஸ் தெருக்களில் கிரெய்க், கோகைன் என்ற போதைப் பொருள் வாங்க முயன்றார். அவரை கைது செய்ய பிரான்ஸ் போலீசார், பின் வழக்குப் பதியாமல் விடுவித்தனர். இதுகுறித்து விசாரித்த ஆஸ்திரேலியா ஹாக்கி (எச்.ஏ.,) அமைப்பு, தாமஸ் கிரெய்க்கை சர்வதேச ஹாக்கியில் இருந்து 12 மாதம் சஸ்பெண்ட் செய்தது. எச்.ஏ., வெளியிட்ட அறிக்கையில்,' பாரிசில் கிரெய்க் கைது செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்பட்டது. முடிவில் 12 மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதில் 6 மாதம் நன்னடத்தை செயல்களில் ஈடுபட வேண்டும். அடுத்த 6 மாதம் ஹாக்கி தொடர்பான எவ்வித நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.