உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ் வளர்ச்சி... வைஷாலி மகிழ்ச்சி

செஸ் வளர்ச்சி... வைஷாலி மகிழ்ச்சி

சென்னை: ''செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற எனது குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய பங்குவகித்தது,'' என, இந்தியாவின் வைஷாலி தெரிவித்துள்ளார்.இந்திய செஸ் வீராங்கனை வைஷாலி 22. தமிழகத்தை சேர்ந்த இவர், இளம் வீரர் பிரக்ஞானந்தாவின் 18, சகோதரி. கடந்த 2018ல் பெண்கள் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற வைஷாலி, 2021ல் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை பெற்றார். சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த தொடரில் பங்கேற்ற இவர், கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெறுவதற்கான 2500 'எலோ' புள்ளிகளை பெற்றார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.கனடாவின் டொரன்டோவில் சமீபத்தில் முடிந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் போது நடந்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') கவுன்சில் கூட்டத்தில் வைஷாலிக்கு, கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதன்மூலம் கிராண்ட்மாஸ்டரான மூன்றாவது இந்திய வீராங்கனை, முதல் தமிழக வீராங்கனையானார். ஏற்கனவே ஹம்பி, ஹரிகா இப்பட்டம் பெற்றுள்ளனர். இதுகுறித்து வைஷாலி கூறியது: பெண்கள் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற பின், விரைவில் கிராண்ட்மாஸ்டர் ஆகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நிறைய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதால் சற்று தாமதமானது. இருப்பினும் தற்போது கிராண்ட்மாஸ்டரானது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.இளம் வயது முதல் நானும், எனது தம்பி பிரக்ஞானந்தாவும் செஸ் போட்டி குறித்து நிறைய பேசுவோம். தற்போதும் இது தொடர்கிறது. போட்டியில் சிறப்பாக செயல்பட நிறைய ஆலோசனை வழங்குவார். இது பலமுறை வெற்றிக்கு கைகொடுத்துள்ளது. இதேபோல எனது பெற்றோர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர். போட்டியின் போது எனது தாயார் எங்களுடன் பயணிப்பார். இவர், எங்களை நன்றாக கவனித்துக் கொள்வதால் போட்டியின் மீது முழு கவனம் செலுத்த முடிகிறது. எனது தந்தை நிதி, திட்டமிடல், பயணம் உள்ளிட்ட விஷயங்களை கவனித்துக் கொள்வார். எனது குடும்ப உறுப்பினர்கள் வழங்கி வரும் ஆதரவால் போட்டியில் சாதிக்க முடிகிறது. அடுத்து நார்வேயில் நடக்கவுள்ள பெண்களுக்கான மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளேன்.இவ்வாறு வைஷாலி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை