செஸ்: அர்ஜுன் மூன்றாமிடம்
சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அர்ஜுன் மூன்றாவது இடம் பிடித்தார். சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 'கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. இதன் நான்காவது சீசனில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், நிகால் சரின், அர்ஜுன் எரிகைசி, பிரனேஷ், அமெரிக்காவின் நைமான், பிரான்சின் அலிரேசா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் உட்பட 8 பேர் பங்கேற்றனர். நேற்று கடைசி, 7வது சுற்று போட்டிகள் நடந்தன. அர்ஜுன்-அலிரேசா மோதினர். அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 41 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. நிகால் சரின்-பிரனேஷ், குகேஷ்-நைமான் மோதிய இரு போட்டிகள் 'டிரா' ஆகின.நாடிர் பெக், ரஷ்யாவின் டிமிட்ரியிடம் தோல்வியடைந்தார். முடிவில் 4.5 புள்ளிகள் பெற்ற அலிரேசா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தலா 4.0 புள்ளிகள் பெற்ற டிமிட்ரி, அர்ஜுன், 2, 3வது இடங்களை பெற்றனர். பிரனேஷ் 5வது, நிகால் சரின் 6வது இடம் பிடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குகேஷ், கடைசி இடத்துக்கு (8) தள்ளப்பட்டார்.