செஸ் ஒலிம்பியாட்: இந்தியா ஆறாவது வெற்றி
புடாபெஸ்ட்: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணிகள் ஆறாவது வெற்றி பெற்றன. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு ஆறாவது சுற்றில் இந்திய அணி, ஹங்கேரியை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் குகேஷ், அர்ஜுன், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் களமிறங்கினர். குகேஷ், பிரக்ஞானந்தா தங்களது போட்டியை 'டிரா' செய்தனர். மற்றொரு போட்டியில் அர்ஜுன், சனன் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், முதலில் பின்தங்கினார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், 57 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். விதித் சந்தோஷ், பெஞ்ஜமினை வென்றார். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில், தொடர்ந்து ஆறாவது வெற்றி பெற்றது. நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென், வியட்நாம் வீரர் லீ லியமிடம் தோல்வியடைய, போட்டி 2.0-2.0 என சமன் ஆனது. இந்திய அணி 12 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. வியட்நாம் (11), சீனா (11), ஈரான் (11) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன. திவ்யா கலக்கல்இந்திய பெண்கள் அணி ஆறாவது சுற்றில், ஆர்மேனியாவை சந்தித்தது. முதலில் வைஷாலி 'டிரா' செய்தார். இளம் வீராங்கனை திவ்யா, எலினாவை வீழ்த்தினார். மற்ற இரு போட்டிகளை ஹரிகா, தானியா 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 2.5-1.5 என இத்தொடரில் ஆறாவது வெற்றி பெற்றது. 12 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜார்ஜியா (11), போலந்து (10) அணிகள் அடுத்து உள்ளன.