உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றி * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அபாரம்

மூன்றாவது சுற்றில் குகேஷ் வெற்றி * உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் அபாரம்

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடக்கிறது. கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, உலகின் 'நம்பர்-5' வீரர், இந்தியாவின் குகேஷ் 18, நடப்பு உலக சாம்பியன், 'நம்பர்-15' ஆக உள்ள டிங் லிரென் 31, (சீனா), பலப்பரீட்சை நடத்துகின்றனர். மொத்தம் 14 சுற்று நடக்கும். முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றில் டிங் லிரென் வென்றார். இரண்டாவது சுற்று 'டிரா' ஆனது. நேற்று மூன்றாவது சுற்று நடந்தது. இம்முறை குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். 18 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. 19 வது நகர்த்தலில் தனது யானையை டிங் லிரென் தவறாக நகர்த்தினார். வாய்ப்பை சரியாக பயன்படுத்திய குகேஷ் அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டார். 25 வது நகர்த்தலுக்குப் பின் குகேஷ் ஆதிக்கம் துவங்கியது. நேரமும் முடிவுக்கு வர, வேறு வழியில்லாத நிலையில் 37 வது நகர்த்தலில் டிங் லிரென் தோல்வியை ஒப்புக் கொண்டார். உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் முதல் வெற்றி பெற்றார். மூன்று சுற்று முடிவில் குகேஷ் (1.5), டிங் லிரென் (1.5) சம நிலையில் உள்ளனர். நாளை நான்காவது சுற்றில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ