உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவின் பதக்க வேட்டைக்கு பாதிப்பு * ஹாக்கி, பாட்மின்டன், கிரிக்கெட் நீக்கம் * காமன்வெல்த் விளையாட்டில் இருந்து...

இந்தியாவின் பதக்க வேட்டைக்கு பாதிப்பு * ஹாக்கி, பாட்மின்டன், கிரிக்கெட் நீக்கம் * காமன்வெல்த் விளையாட்டில் இருந்து...

லண்டன்: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் இருந்து ஹாக்கி, பாட்மின்டன், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். 2026ல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்க இருந்தது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக விலகியது. 10 போட்டி மட்டும்தற்போது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் (2026, ஜூலை 23 - ஆக. 2), 23வது காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது. செலவை குறைக்கும் பொருட்டு ஹாக்கி, பாட்மின்டன், மல்யுத்தம், 'டி-20' கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், டைவிங், ஸ்குவாஷ், பீச் வாலிபால், ரக்பி செவன்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை போல துப்பாக்கி சுடுதலும் சேர்க்கப்படவில்லை. குத்துச்சண்டை, ஜூடோ, பாரா தடகளம், நீச்சல், ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிளிங், நெட் பால், பளுதுாக்குதல் உட்பட 10 போட்டிகள் நான்கு மைதானங்களில் நடக்க உள்ளன. இதனால் செலவை கணிசமாக குறைக்கலாம்.இந்தியாவுக்கு இழப்புஇம்முடிவு இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. கடந்த 2022ல் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் நான்காவது இடம் பிடித்தது. இதில் மல்யுத்தம் (12 பதக்கம்), டேபிள் டென்னிஸ் (7), பாட்மின்டன் (6), ஹாக்கி (2), ஸ்குவாஷ் (2), கிரிக்கெட்டில் (1) மட்டும் 30 பதக்கம் வென்றது. ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் விளையாட்டு ஹாக்கியில் ஆண்கள் அணி 3 வெள்ளி, 2 வெண்கலம், பெண்கள் அணி ஒரு தங்கம் (2002) உட்பட 3 பதக்கம், பாட்மின்டனில் 31 பதக்கம் (10 தங்கம், 8 வெள்ளி, 13 வெண்கலம்), துப்பாக்கி சுடுதலில் 135 பதக்கம் (63 தங்கம், 44 வெள்ளி, 28 வெண்கலம்), மல்யுத்தத்தில் 114 பதக்கம் (49 தங்கம், 39 வெள்ளி, 26 வெண்கலம்), பெண்கள் 'டி-20' கிரிக்கெட்டில் ஒரு வெள்ளி (2022) வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த போட்டிகள் 2026ல் இடம் பெறாது என்பதால், நமது பதக்க எண்ணிக்கை குறையலாம். சிந்து உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் ஆட்டத்தையும் காண முடியாது. விதி என்பதா... சதி என்பதாஇந்திய விளையாட்டு நட்சத்திரங்கள், நிர்வாகிகள் கூறியது.சஞ்சய் மிஸ்ரா, இந்திய பாட்மின்டன் சங்க பொதுச் செயலர்: காமன்வெல்த் விளையாட்டில் முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டது, இந்தியாவுக்கு பின்னடைவு. சுமார் 40 பதக்கங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது, விளையாட்டு சக்தியாக இந்தியா உருவெடுப்பதை தடுப்பதற்கான சதியாக தோன்றுகிறது.போலாநாத் சிங், ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச் செயலர்: இந்தியா பதக்கம் வெல்லக்கூடிய பெரும்பாலான போட்டிகளை நீக்கிவிட்டனர். இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கேள்வி எழுப்ப வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சஞ்சய் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர்: ஸ்காட்லாந்தில் சிறந்த மல்யுத்த வீரர்கள் கிடையாது. அதனால் மல்யுத்தத்தை நீக்கியுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டில் நமது மல்யுத்த அணி வலிமையானது. மீண்டும் இடம் பெறச் செய்யும்படி வலியுறுத்துவோம். கலிகேஷ் சிங் தியோ, தேசிய ரைபிள் சங்க தலைவர்: வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் போன்ற பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டுகளை நீக்கியுள்ளனர். காமன்வெல்த் விளையாட்டின் தரம் குறைந்துவிட்டது. ஹர்மன்பிரீத் சிங், ஹாக்கி அணி கேப்டன்: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றோம். தற்போது காமன்வெல்த் விளையாட்டில் ஹாக்கி சேர்க்கப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. சரத் கமல், டேபிள் டென்னிஸ்: விக்டோரிய நகரில் இருந்து திடீரென கிளாஸ்கோவுக்கு இடம் மாற்றப்பட்டது. குறைவான கால அவகாசம் இருப்பதால், பல போட்டிகளை சேர்க்க முடியவில்லை என்கின்றனர். டேபிள் டென்னிஸ் இடம் பெறாதது வேதனைக்குரியது. காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிசில் நாம் நிறைய தங்கம் வென்றுள்ளோம்.சத்யன், டேபிள் டென்னிஸ்: இந்திய டேபிள் டென்னிசிற்கு பெரிய இழப்பு. மீண்டும் இடம் பெறச் செய்ய நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன். தீபிகா பல்லீகல், ஸ்குவாஷ்: காமன்வெல்த் விளையாட்டில் இடம் பெற தகுதியான போட்டி ஸ்குவாஷ். இதை நீக்கியது ஏமாற்றமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
அக் 23, 2024 05:02

பணம் இல்லை என்றால், இந்த போட்டிகளை அந்தந்த நாடுகளில் நடத்தி, பைனல் போட்டியை அங்கு நடத்தினால் என்ன? டெஸ்ட் கிரிக்கெட் போல? ஒரு பிரச்சினை என்றால் பலதீர்வுகள் இருக்கும்.