வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய படகு போட்டியில்
ஹாய் போங்: ஆசிய படகு போட்டியில் 3 தங்கம் உட்பட 10 பதக்கம் வென்று வரலாறு படைத்தது இந்தியா.வியட்நாமில், ஆசிய படகு போட்டி சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் இரட்டையர் 'லைட்வெயிட் காக்ஸ்லெஸ்' பிரிவு பைனலில் இந்தியாவின் குர்பானி கவுர், தில்ஜோத் கவுர் ஜோடி, இலக்கை 7 நிமிடம், 51.374 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர். இதன்மூலம் ஆசிய படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனைகள் என்ற சாதனை படைத்தனர்.ஆண்களுக்கான 'குவாட்ரபிள் ஸ்கல்ஸ்' (4 பேர்) பிரிவு பைனலில் குல்விந்தர் சிங், நவ்தீப் சிங், சத்னம் சிங், ஜாகர் கான் அடங்கிய இந்திய அணி (6 நிமிடம், 04.162 வினாடி) தங்கம் வென்றது.ஆண்களுக்கான 'லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்' பிரிவு பைனலில் இந்தியாவின் அஜய் தியாகி, லக்சய் ஜோடி (6 நிமிடம், 40.75 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றது.ஆண்களுக்கான தனிநபர் 'ஸ்கல்ஸ்' பிரிவு பைனலில் இந்தியாவின் பால்ராஜ் பன்வார் (7 நிமிடம், 37.824 வினாடி) தங்கம் வென்றார்.இத்தொடரில் 3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என, முதன்முறையாக 10 பதக்கங்களை பெற்ற இந்தியா வரலாறு படைத்தது.