ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: இந்திய அணி வெற்றி துவக்கம்
சென்னை: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 7-0 என, சிலியை வென்றது.சென்னை, மதுரையில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நேற்று துவங்கியது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின.இந்திய அணிக்கு ரோசன் குஜுர் 2 கோல் (16, 21வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். பின் 25வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் தில்ராஜ் சிங் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தில்ராஜ் (34வது நிமிடம்), அஜீத் யாதவ் (35), அன்மோல் (48), கேப்டன் ரோகித் (௬௦) தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் சுவிட்சர்லாந்து, ஓமன் அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து அணி 4-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அசத்தல்: 'சி' பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா சார்பில் நிக்கோலஸ் ரோட்ரிக்ஸ் 2 (2, 56வது நிமிடம்), மேடியோ டோரிகியானி (24வது), புருனோ கோரியா (51வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, சீனா அணிகள் மோதின. ஜான்டி எல்ம்ஸ் (8, 25, 25வது நிமிடம்), ஓவன் பிரவுன் (18வது), சாம் லின்ட்ஸ் (23வது) கோல் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சீனா சார்பில் வாங் யூபோ (35, 55வது நிமிடம்), ஜாங் ஜியாலியாங் (51வது) கோல் அடித்தனர்.