உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜோதிகாவின் ஒலிம்பிக் இலக்கு

ஜோதிகாவின் ஒலிம்பிக் இலக்கு

புவனேஸ்வர்: ''எனது தந்தையின் கனவை நனவாக்க, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்,'' என ஜோதிகா தெரிவித்தார்.பஹாமசில் நடந்த உலக தடகள, 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் அசத்திய ரூபல் சவுத்ரி, ஜோதிகா ஸ்ரீ டாண்டி, பூவம்மா, சுபா அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 29.35 வினாடி), பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு (ஜூலை 26-ஆக.11) தகுதி பெற்றது. இதில் ஆந்திராவை சேர்ந்த ஜோதிகா 23, படிப்பில் கெட்டிக்காரர். தந்தை ஸ்ரீனிவாச ராவ் ஆசையை நிறைவேற்ற தடகளத்தில் இறங்கினார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டுள்ளார். ஜோதிகா கூறுகையில்,''பத்தாம் வகுப்பில் 97 சதவீத மதிப்பெண் பெற்றேன். டாக்டருக்கு படிக்க விரும்பினேன். என் தந்தை விருப்பம் வேறாக இருந்தது. அவர் சிறந்த 'பாடிபில்டராக' இருந்தார். குடும்பத்தினர் ஆதரவு இல்லாததால், அவரால் விளையாட்டில் தொடர முடியவில்லை. என்னை தடகள வீராங்கனையாக பார்க்க விரும்பினார். நாட்டுக்காக ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் பள்ளி அளவில் 200, 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தேன். களிமண் களத்தில் ஓடினேன். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன். உலக பள்ளி விளையாட்டு, ஆசிய யூத் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றேன். 2020ல் தடகளத்தின் மீதான தாகம் அதிகரித்தது. தந்தைக்காக எனது டாக்டர் கனவை கைவிட்டேன். அவரது மகிழ்ச்சிக்காக ஓட்டத்தில் முழு கவனம் செலுத்தினேன். 2023ல் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 4X400 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றேன். 2024ல் தேசிய சாம்பியன்ஷிப்பில் 400 மீ., ஓட்டத்தில் (52.73 வினாடி) அசத்தினேன். தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். இங்கு கடும் சவாலை சந்திக்க நேரிடும். பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ