தங்கம் வென்றார் ஜோதி: உள்ளரங்கு தடகளத்தில்
நான்டெஸ்: பிரான்சில் நடந்த உள்ளரங்கு தடகளத்தின் 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்.பிரான்சில், உள்ளரங்கு சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி 25, பங்கேற்றார். தகுதிச் சுற்றில் 8.07 வினாடியில் இலக்கை அடைந்து 3வது இடம் பிடித்த ஜோதி, தேசிய சாதனையுடன் பைனலுக்கு முன்னேறினார். இதற்கு முன், கடந்த ஆண்டு ஈரானில் நடந்த ஆசிய உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டியில் இலக்கை 8.12 வினாடியில் கடந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஜோதி, பந்தய துாரத்தை 8.04 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து தனது சொந்த தேசிய சாதனையை மீண்டும் முறியடித்தார்.ஆண்களுக்கான 60 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜாஸ் ஷிர்ஸ் (7.68 வினாடி) வெண்கலம் வென்றார்.