மணிஷாவின் அடுத்த இலக்கு
புதுடில்லி: ‘‘வரும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்,’’ என மணிஷா தெரிவித்துள்ளார். கஜகஸ்தானில், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான பிரீஸ்டைல் 59 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் மணிஷா, 29, பங்கேற்றார். பைனலில் அமெரிக்காவின் அபிகெய்ல் எலிசபெத்தை சாய்த்தார். இதில், 1–5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மணிஷா, பின் 8–6 என வென்றார். இதையடுத்து உலக மல்யுத்த ‘சீனியர்’ சாம்பியன்ஷிப், 39 ஆண்டு வரலாற்றில், தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய சாதனை படைத்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன், ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டில் வெறுங்கையுடன் திரும்பிய இவருக்கு, இந்த தங்கப்பதக்கம் உற்சாகம் தந்துள்ளது. இதுகுறித்து மணிஷா கூறியது: ஆசிய விளையாட்டில் எப்படியும் பதக்கம் வெல்வேன் என நம்பி இருந்தேன். ஆனால், அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. இது பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதுகுறித்து பயிற்சியாளரிடம் தொடர்ந்து ஆலோசித்து வந்தேன். ‘‘கடவுள் ஏதாவது பெரிய பரிசாக உனக்கு கொடுக்க திட்டமிட்டு இருக்கலாம். அடுத்து உலக சாம்பியன்ஷிப்பில் எப்படியும் பதக்கம் வென்று விடலாம்,’’ என அவர், நம்பிக்கை தந்தார். பொதுவாக சர்வதேச போட்டிகளில் சில நேரங்களில் துவக்கத்தில் புள்ளிகளை விட்டுக் கொடுத்து விடுவேன். இது நெருக்கடியாக இருக்கும். இருப்பினும் எப்படியும் 10 புள்ளிகள் எடுத்து விட வேண்டும் என்ற போராடுவேன். பைனலில் இது தான் நடந்தது. போட்டிகளில் சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல. எந்தளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி கிடைக்கும். அடுத்து 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் சந்திப்போம். அப்போதும் எனது கையில் ஒரு பதக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.