தேசிய விளையாட்டு: ஜோதி ஹாட்ரிக் தங்கம்
டேராடூன்: தேசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ஆதர்ஷ் ராம் தங்கம் வென்றார். 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.உத்தரகாண்ட்டில், தேசிய விளையாட்டு 38வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பைனலில் அசத்திய தமிழகத்தின் ஆதர்ஷ் ராம், அதிகபட்சமாக 2.14 மீ., தாண்டி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை ஒடிசாவின் சுவாதின் குமார் (2.11 மீ.,), கர்நாடகாவின் சுதீப் (2.08 மீ.,) கைப்பற்றினர்.பிரித்விராஜ் 'தங்கம்'ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 'டிராப்' பிரிவில் தமிழகத்தின் பிரித்விராஜ் தொண்டைமான் (42 புள்ளி) தங்கம் வென்றார். ராஜஸ்தானின் அலி அமான் இலாஹி (41), உத்தரகாண்ட்டின் ஆர்யா வன்ஷ் தியாகி (29) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.ஜோதி 'ஹாட்ரிக்'பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் ஆந்திராவின் ஜோதி, பந்தய துாரத்தை 13.10 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது, தேசிய விளையாட்டில் இவரது 'ஹாட்ரிக்' தங்கம். ஏற்கனவே இவர், 2022 (குஜராத்), 2023 (கோவா) சீசனில் தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், தேசிய விளையாட்டில் தனது சொந்த சாதனையை முறியடித்தார். கடந்த 2023ல், 13.22 வினாடியில் இலக்கை அடைந்திருந்தார். இவரது தேசிய சாதனை 12.78 வினாடியாக (2023) உள்ளது.வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை மேற்கு வங்கத்தின் மவுமிதா (13.36 வினாடி), தமிழகத்தின் நித்யா ராம்ராஜ் (13.60 வினாடி) கைப்பற்றினர்.* ஆண்களுக்கான 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தின் பைனலில் மகாராஷ்டிராவின் தேஜாஸ் ஷிர்ஸ், பந்தய துாரத்தை 13.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது, தேசிய விளையாட்டில் இவரது 'ஹாட்ரிக்' (2023, 2024, 2025) தங்கம். தவிர இவர், தேசிய விளையாட்டில் தனது சொந்த சாதனையை முறியடித்தார். கடந்த 2023ல், 13.71 வினாடியில் இலக்கை அடைந்திருந்தார். இவரது தேசிய சாதனை 13.41 வினாடியாக (2024) உள்ளது.தமிழகத்தின் மானவ் (14.03 வினாடி), கேரளாவின் முகமது லாசன் (14.23 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.வித்யா 'வெள்ளி'பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 54.43 வினாடியில் அடைந்த தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் வெள்ளி வென்றார். மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா மிஷ்ரா (51.12 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். குஜராத் வீராங்கனை தேவயானிபா ஜாலா (54.44 வினாடி) வெண்கலத்தை கைப்பற்றினார்.தமிழகம் 'வெள்ளி'ஆண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில், சிவகுமார், தமிழரசு, மானவ், ராகுல் குமார் அடங்கிய தமிழக அணி, இலக்கை 40.08 வினாடியில் அடைந்து வெள்ளி வென்றது. தங்கப்பதக்கத்தை ஒடிசா (39.47 வினாடி) தட்டிச் சென்றது. கேரளாவுக்கு (40.73 வினாடி) வெண்கலம் கிடைத்தது.பெண்களுக்கான 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் கர்நாடகா (45.99 வினாடி), கேரளா (47.04 வினாடி), தெலுங்கானா (47.58 வினாடி) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின. இப்போட்டியில் தமிழக அணி (46.01 வினாடி) 2வது இடம் பிடித்திருந்தது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.