தங்கம் வென்றார் பவானி தேவி * தேசிய விளையாட்டு வாள் சண்டையில்...
டேராடூன்: தேசிய விளையாட்டு வாள் சண்டையில் தமிழகத்தின் பவானி தேவி, பிபிஷ் தங்கப்பதக்கம் கைப்பற்றினர். தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர், வாள் சண்டை போட்டியில் தமிழகத்தின் பவானி தேவி, தங்கம் கைப்பற்றினார். ஹரியானாவின் அஹ்ரி, வெள்ளி வென்றார். ஆல்கா (கேரளா), ஷ்ருதி (மகாராஷ்டிரா) வெண்கலம் பெற்றனர். ஆண்களுக்கான வாள் சண்டை போட்டியில் தமிழக வீரர் பிபின் தங்கம் வென்றார். பீஹாரின் ஆகாஷ் (வெள்ளி), சர்வீசஸ் அணியின் சன் சிங், பிக்கி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர். தடகளத்தில் அபாரம்ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தின் கிட்சன், ஆகாஷ் பாபு, வாசன், அஸ்வின் கிருஷ்ணா இடம் பெற்ற அணி, 3 நிமிடம், 10.61 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. உத்தரகாண்ட் (3:10.85), சர்வீசஸ் (3:10.90) அணிகள் வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றன.பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் பஞ்சாப் (3:41.77), கர்நாடகா (3:43.89) தங்கம், வெள்ளி கைப்பற்றின. தமிழக அணி (3:45.84), 0.01 வினாடியில் ஹரியானாவிடம் (3:45.83) வெண்கலப் பதக்கத்தை இழந்தது. ஆண்களுக்கான போல் வால்ட் போட்டி நடந்தது. மத்திய பிரதேச வீரர் தேவ் குமார் மீனா, 5.32 மீ., உயரம் தாண்டி, தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்து தங்கம் கைப்பற்றினார். கடந்த 2023ல் இவர் 5.31 மீ., துாரம் தாண்டினார். தமிழக வீரர் ரீகன், 5 மீ., உயரம் தாண்டி, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். உத்தர பிரதேசத்தின் குல்தீப் குமார் (5 மீ.,) வெண்கலம் வென்றார்.தஜிந்தர் அபாரம்ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர் சிங் 19.74 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மத்திய பிரதேசத்தின் நடப்பு சாம்பியன் சமர்தீப் சிங் (19.38 மீ.,), பஞ்சாப்பின் பிரப்கிர்பால் சிங் (19.04 மீ.,) வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர். பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் பஞ்சாப்பின் நிஹாரிகா (13.37 மீ.,) தங்கப்பதக்கம் வென்றார். கேரளாவின் ஷீனா (13.19 மீ.,), சந்திராவுக்கு (13.12 மீ.,) வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தன.