உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மீண்டும் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * ஒலிம்பிக் தடகளம் இன்று துவக்கம்

மீண்டும் சாதிப்பாரா நீரஜ் சோப்ரா * ஒலிம்பிக் தடகளம் இன்று துவக்கம்

பாரிஸ்: ஒலிம்பிக் தடகள போட்டிகள் இன்று பாரிசில் துவங்குகின்றன. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இன்று முதல் தடகள போட்டிகள் துவங்குகின்றன. இந்தியா சார்பில் 11 வீராங்கனைகள் உட்பட 29 பேர் பங்கேற்கின்றனர். இவர்கள் 16 பதக்கங்களை பெற போட்டியிட உள்ளனர். முதலில் ஆண்களுக்கான 20 கி.மீ., நடை பந்தயம் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் அக் ஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் என மூன்று வீரர்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 20 கி.மீ., போட்டியில் பிரியங்கா களமிறங்குகிறார்.நீரஜ் நம்பிக்கைஈட்டி எறிதல் (ஆக. 6ல் தகுதிச்சுற்று) போட்டியில் நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (2021, டோக்கியோ) வென்று தந்த இவர், மீண்டும் பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்.ஒலிம்பிக் ஈட்டி எறிதல் வரலாற்றில், இதுவரையில் எரிக் லெம்மிங் (சுவீடன், 1908-12), ஜான்னி மைரா (பின்லாந்து, 1920-24), ஜான் ஜெலெஸ்னி (செக் குடியரசு, 1992-96, 2000), ஆன்ட்ரியாஸ் (நார்வே, 2008-08) என நான்கு வீரர்கள் மட்டும் தங்கப்பதக்கத்தை அடுத்தடுத்த தொடரில் தக்க வைத்துள்ளனர்.நீரஜ் சோப்ரா சாதிக்கும் பட்சத்தில் தொடர்ந்து இரு தங்கம் வென்ற முதல் இந்தியர், சர்வதேச அளவில் ஐந்தாவது ஈட்டி எறிதல் வீரர் ஆகலாம்.டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின் பங்கேற்ற 15 சர்வதேச தொடரில், இரு முறை மட்டும் தான் 85 மீ.,க்கும் குறைவான துாரத்தில் ஈட்டி எறிந்தார். மற்ற அனைத்திலும் 85 மீ., க்கும் அதிகமாக எறிந்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனாவும் சாதிக்க முயற்சிக்கலாம்.ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள்சேஸ் போட்டியில் அவினாஷ் சபிள், ஆண்கள் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் 'டாப்-5' இடத்துக்குள் வர முயற்சிக்கலாம். தொடர் ஓட்ட வீரர் தமிழகத்தின் ராஜேஷ் ரமேஷ், காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளது பலம்.தவிர ஜோதி (100 மீ., தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (பெண்கள் 3000 மீ., ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), தஜிந்தர்பால் சிங் (குண்டு எறிதல்), பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்) உள்ளிட்டோரும் திறமை வெளிப்படுத்த உள்ளனர்.'ரெப்பிசாஜ்' அறிமுகம்தடை ஓட்டம், 200 மீ., முதல் 1500 மீ., வரையில் என அனைத்து தனிநபர் ஓட்டத்திலும் 'ரெப்பிசேஜ்' (மற்றொரு வாய்ப்பு) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் படி ஒவ்வொரு தகுதிச்சுற்றிலும் முதலிடம் பெறுபவர்கள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறுவர்.பின் ஒட்டுமொத்தமாக சிறப்பாக ஓடியவர்கள் தரவரிசை அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. இதற்குப் பதில், முதல் இடம் பெற்றவர்களை தவிர, மற்றவர்கள் 'ரெப்பிசேஜ்' ஓட்டத்தில் பங்கேற்று சாதித்தால், அரையிறுதிக்கு செல்ல முடியும். இதனால் தகுதிச்சுற்றில் துரதிருஷ்டவசமாக சிறப்பாக செயல்பட முடியாத நட்சத்திரங்கள், பதக்கம் வெல்ல மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ