100 வது கிராண்ட் மாஸ்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு
புதுடில்லி: இந்தியாவின் 100வது கிராண்ட்மாஸ்டர் ஆன அனுஜ் ஸ்ரீவத்ரிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய செஸ் அரங்கில் தமிழகத்தின் ஆனந்த், 1988ல் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார். தற்போது, பிலிப்பைன்சில் நடந்த, 7வது ஆசியன், தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப், இந்தியாவின் அனுஜ் ஸ்ரீவத்ரி பட்டம் வென்றார். இதையடுத்து, இந்திய செஸ் அரங்கின் 100வது கிராண்ட்மாஸ்டர் என பெருமை பெற்றார். இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: செஸ் அரங்கில் இந்தியா, சதம் அடித்துள்ளது. இது ஒரு மகத்தான சாதனை. தற்போது இந்தியா, 100 கிராண்ட்மாஸ்டர்களின் தாயகமாக உள்ளது. இந்தியாவின் 100வது கிராண்ட்மாஸ்டர் ஆன அனுஜ் ஸ்ரீவத்ரிக்கு வாழ்த்துகள். இது வியக்கத்தக்க சாதனை. இந்தியாவில் இன்னும் பல நட்சத்திரங்கள் செஸ் போட்டியில் பங்கேற்க துாண்டுகோலாக இது அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.