சரியான பாதையில் இந்திய விளையாட்டு * புதிய மசோதாவுக்கு வரவேற்பு
புதுடில்லி: ''புதிய விளையாட்டு மசோதா, இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தும்,'' என பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் புதியதாக விளையாட்டு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. லோக் சபாவைத் தொடர்ந்து, நேற்று ராஜ்ய சபாவில், குரல் ஓட்டு மூலம் நிறைவேறியது. இதையடுத்து தேசிய விளையாட்டு போர்டு (என்.எஸ்.பி.,) சட்டமாக மாற உள்ளது. இனிமேல் இந்தியாவின் தேசிய விளையாட்டு அமைப்புகளை (என்.எஸ்.எப்.எஸ்.,) எஸ்.எஸ்.பி., ஒழுங்கு படுத்தும். முறையாக விளையாட்டு நிர்வாகம் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. இதையடுத்து உலகத் தரமான நிர்வாகம், வீரர், வீராங்கனைகள் குறைகளை தீர்க்க, விளையாட்டு தீர்ப்பாயம் உட்பட பல்வேறு மாற்றங்கள் வரவுள்ளன. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறியது:புதிய விளையாட்டு மசோதாவுக்காக நீண்ட காலம் காத்திருந்தேன். இது சட்டமான இன்றைய நாள், தேசிய முக்கியத்துவம் வாயந்தது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பாலின சமத்துவம், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு அதிகாரம் கிடைக்கும். தவிர விளையாட்டு அமைப்புகள், ஸ்பான்சர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும். வரும் 2036ல் ஒலிம்பிக் நடத்த தயாராகி வரும் நிலையில், புதிய விளையாட்டு மசோதா, இந்தியாவை சரியான பாதையில் வழிநடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.புதிய வரலாறுஹாக்கி இந்தியாவின் தலைவர், முன்னாள் வீரர் திலிப் டிர்கே கூறுகையில்,'' புதிய சீர்த்திருத்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. வீரர், வீராங்கனைகள், அனைத்து ஆதரவாளர்கள் இடையே நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது. உலகத் தரமான நிர்வாகத்தை இது கொண்டு வரும்,'' என்றார்.ஆளுக்கொரு நீதிஇந்திய தடகள கூட்டமைப்பு தலைவர் சுமரிவால்லா கூறுகையில்,'' இந்தியாவில் பெரும்பாலான விளையாட்டு அமைப்புகள் வழக்குகளால் திண்டாடுகின்றன. தேர்தல் நடத்துவது பெரிய விஷயமாக உள்ளது. விளையாட்டு அமைப்பு குறித்த தெளிவான பார்வை, நீதிமன்றங்களுக்கு இல்லை. இதனால் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நீதி, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ஒரு நீதி என ஒரே விவகாரத்தில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது கூடுதுல் சிக்கலை தருகிறது. புதிய சட்டம், இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் என நம்புகிறேன்,'' என்றார்.