வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜொலிக்கும் செஸ் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும், மேலும் பட்டங்கள் குவியட்டும்.
பதுமி: செஸ் உலக கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் திவ்யா. பைனலில் தோல்வி அடைந்த சக வீராங்கனை ஹம்பி இரண்டாவது இடம் பெற்றார். ஜார்ஜியாவில் பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடந்தது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்றனர். 'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் பைனலுக்கு 19 வயது திவ்யா, இவரை விட இரண்டு மடங்கு அதிக வயதுள்ள ஹம்பி 38, என இரு இந்திய வீராங்கனைகள் முன்னேறி, புதிய வரலாறு படைத்தனர். பைனலில் இரு போட்டிகள் நடந்தன. இரண்டும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமன் ஆனது. 'டை பிரேக்கர்'வெற்றியாளரை முடிவு செய்ய நேற்று 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் இரு போட்டி நடந்தன. ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடம் தரப்பட்டன. முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா. 28 வது நகர்த்தலில் ஹம்பி முந்தினார். பின் சிறப்பாக செயல்பட்ட திவ்யா, 81வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். ஸ்கோர் 1.5-1.5 என ஆனது.அடுத்து நடந்த இரண்டாவது 'டை பிரேக்கரில்' திவ்யா, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். 53 நகர்த்தல் வரை இருவரும் சமமாக இருந்தனர். ஆனால் கைவசம் 13 வினாடி மட்டும் வைத்திருந்த ஹம்பி, நெருக்கடியில் தவறு செய்தார். மறுபக்கம் 2:30 நிமிடம் இருந்ததால், வாய்ப்பை பயன்படுத்திய திவ்யா, அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டார். கடைசியில் 75 நகர்த்தலுக்குப் பின், ஹம்பி தோல்வியை ஏற்றுக் கொண்டார். 24 நாள் நடந்த இத்தொடரின் முடிவில் திவ்யா 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட்மாஸ்டர் எப்படிசெஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற, சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') தரவரிசையில் குறைந்தது 2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். தவிர, ஒரே தொடரில் குறைந்தது இரண்டு கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்றவர்களை வீழ்த்துவது உட்பட 3 அந்தஸ்து பெற வேண்டும். திவ்யாவை பொறுத்தவரையில், 2463 புள்ளி தான் பெற்றுள்ளார். இருப்பினும் 'பிடே' விதிப்படி உலக கோப்பை உள்ளிட்ட மிகப்பெரிய தொடரில் கோப்பை வெல்பவருக்கு நேரடியாக இந்த அந்தஸ்து தரப்படுகிறது. இதன்படி திவ்யா, கிராண்ட்மாஸ்டர் ஆனார்.இதுகுறித்து இவர் கூறுகையில்,'' 3 அந்தஸ்தில் ஒன்று கூட எனக்கு இல்லை. இருப்பினும், உலக கோப்பை வென்றால் பட்டம் பெறலாம் என்ற நிலையில், இப்படித் தான் 'கிராண்ட்மாஸ்டர்' ஆக வேண்டும் என விதி அமைந்துள்ளது,'' என்றார். நான்காவது வீராங்கனைஉலக செஸ் தொடரில் சாதித்த திவ்யா, இந்தியாவின் 88 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். * ஹம்பி (2002), ஹரிகா (2011), வைஷாலியை (2023) தொடர்ந்து கிராண்ட்மாஸ்டர் ஆன 4வது இந்திய வீராங்கனை திவ்யா. சர்வதேச அரங்கில் 44 வது வீராங்கனை ஆனார்.இந்தியா ஆதிக்கம்உலக செஸ் அரங்கில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. பல்வேறு முக்கிய தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாம்பியனாக உள்ளனர்.தொடர் வீரர்/வீராங்கனைஉலக சாம்பியன் குகேஷ்உலக 'ரேபிட்' சாம்பியன் ஹம்பிசெஸ் ஒலிம்பியாட் இந்திய ஆண்கள்செஸ் ஒலிம்பியாட் இந்திய பெண்கள்உலக கோப்பை திவ்யாஇளம் வீராங்கனைபெண்களுக்கான செஸ் தொடரில் உலக கோப்பை வென்ற இளம் வீராங்கனை என பெருமை பெற்றார் திவ்யா, 19. உலக சாம்பியன்ஷிப்பில் சாதித்த இளம் வீரராக இந்தியாவின் குகேஷ் 19, உள்ளார். ரூ. 43.33 லட்சம் பரிசுஆண்களுக்கான உலக கோப்பை (2023) தொடரில் கோப்பை வென்ற கார்ல்சன் ரூ. 95.35 லட்சம், 2வது இடம் பெற்ற பிரக்ஞானந்தா ரூ. 69.35 லட்சம் பெற்றனர். பெண்கள் தொடருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. புதிய சாம்பியன் திவ்யா ரூ. 43.33 லட்சம், ஹம்பி ரூ. 30.33 லட்சம் பெற்றனர். ஆனந்திற்கு அடுத்து...உலக கோப்பை தொடரில் இந்திய ஜாம்பவான் ஆனந்த், 2000, 2002 என இரு முறை சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்து உலக கோப்பை வென்ற இந்தியர் ஆனார் திவ்யா. வாழ்த்து மழைஜனாதிபதி திரவுபதி முர்மு: உலக கோப்பை செஸ் பைனலில் விளையாடிய இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இது இந்திய பெண்களின் திறமையை உணர்த்துகிறது. சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான திவ்யாவுக்கு எனது வாழ்த்துகள். 19 வயதில் சாதித்துள்ளார்.பிரதமர் மோடி: இளம் வீராங்கனை திவ்யா, உலக கோப்பை வென்றது பெருமையாக உள்ளது. வியக்கத்தக்க சாதனை படைத்து, இளைஞர்களுக்கு துாண்டுகோலாக அமைந்ததற்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் ஹம்பி சிறப்பாக செயல்பட்டார். இருவரின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்.செஸ் ஜாம்பவான் ஆனந்த்: உலக கோப்பை, கிராண்ட்மாஸ்டர் பட்டம், கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி என பல சாதனை படைத்த திவ்யாவுக்கு வாழ்த்துகள். ஹம்பி கடைசி வரை போராடினார். இந்தியாவில் பெண்கள் செஸ் போட்டியை கொண்டாடும் தருணம் இது. ஐந்து வயதில் ஆரம்பம்இந்தியாவின் புதிய செஸ் 'ராணியாக' உருவெடுத்துள்ளார் திவ்யா, 19. மஹாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர். இவரது தந்தை ஜிதேந்திரா தேஷ்முக், தாய் நம்ரதா இருவருமே டாக்டர்கள். இவர்கள் வசித்த பகுதியில் கூடைப்பந்து, பாட்மின்டன், செஸ் பயிற்சி மையங்கள் இருந்தன. திவ்யாவின் அக்கா ஆர்யா, பாட்மின்டனை தேர்வு செய்தார். திவ்யாவுக்கு ஐந்து வயதிலேயே செஸ் மீது ஆர்வம் பிறந்தது. சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் ரமேஷ் நடத்தும் செஸ் குருகுலத்தில் பயிற்சி பெற்றார். மிக விரைவில் சர்வதேச செஸ் அரங்கில் ஜொலிக்க துவங்கினார். படிப்பிலும் கெட்டியாக உள்ளார். பிளஸ் 2ல் நல்ல மதிப்பெண் பெற்றார். பெற்றோர் கைகள் 'ஸ்டெதஸ்கோப்' பிடித்த போதும், திவ்யாவின் விரல்கள் என்னவோ செஸ் போர்டில் காய் நகர்த்துவதில் துடிப்பாக உள்ளன. திவ்யா ஒரு முறை கூறுகையில்,''செஸ் போட்டியை தற்செயலாக தான் தேர்வு செய்தேன். அப்போது எனக்கு 5 வயது இருக்கும். பாட்மின்டன் பயிற்சி மையத்திற்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். என்னால் பாட்மின்டன் 'நெட்டை' கூட தொட முடியவில்லை. அருகில் செஸ் போட்டி நடந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் பிடித்து விட்டது. அன்று முதல் செஸ் என்னுள் கலந்து விட்டது,''என்றார்.ஆனந்த கண்ணீர்உலக கோப்பை செஸ் பைனலில் ஹம்பியை வீழ்த்தியதும் ஆனந்த கண்ணீர் சிந்தினார் திவ்யா. அருகில் இருந்து தாயார் நம்ரதாவை கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தோனி போல...திவ்யாவின் இளமைக்கால பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணன் கூறுகையில்,''கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் என அனைத்துவித செஸ் போட்டிகளிலும் அசத்தும் திறன் பெற்றவர் திவ்யா. இக்கட்டான தருணங்களில் சாதிப்பதே இவரது பலம். கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் வெற்றி தேடித் தருவார் தோனி. இவரை போல திவ்யாவும் நெருக்கடியான சமயத்தில் 'கூலாக' செயல்பட்டு வெல்வார். பெண்கள் செஸ் அரங்கில் இன்னும் நிறைய சாதிப்பார்,''என்றார்.
ஜொலிக்கும் செஸ் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும், மேலும் பட்டங்கள் குவியட்டும்.