பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா முன்னேறினர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவரோ மோதினர். இதில் சபலென்கா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-4, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-6, 6-0, 6-1 என ரஷ்யாவின் எலினா அவனேஸ்யனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மெத்வெடேவ் அதிர்ச்சி
ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர். இதில் மெத்வெடேவ் 6-4, 2-6, 1-6, 3-6 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
போபண்ணா ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 6-7, 6-3, 7-6 என்ற கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுயல் மார்டினஸ் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.