உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / விம்பிள்டன்: நடால் விலகல்

விம்பிள்டன்: நடால் விலகல்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் நடால் விலகினார்.லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் (ஜூலை 1-14) நடக்கவுள்ளது. இத்தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 38, விலகினார். கடந்த 18 மாதங்களாக இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர், கடந்த ஆண்டு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றோடு திரும்பினார்.இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஸ்பெயின் டென்னிஸ் அணிக்கு நடால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவிலும் விளையாட இருப்பதால் காயத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விம்பிள்டனில் இருந்து விலகினார். இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், விம்பிள்டனில் இரண்டு முறை (2008, 2010) கோப்பை கைப்பற்றினார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக சுவீடனில் களிமண்கள ஆடுகளத்தில் நடக்கும் தொடரில் (ஜூலை 15-21) பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து நடால் கூறுகையில், ''விம்பிள்டனில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த ஆண்டு பங்கேற்கப் போவதில்லை. இது வருத்தமளிக்கிறது,'' என்றார்.

பரிசுத்தொகை உயர்வு

விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ. 534 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 57 கோடி அதிகம். ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ. 28 கோடி பரிசாக கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !