உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / அரியலூர் / அரியலூரில் செஷன்ஸ் கோர்ட் அமைக்க தமிழக அரசு உத்தரவு

அரியலூரில் செஷன்ஸ் கோர்ட் அமைக்க தமிழக அரசு உத்தரவு

அரியலூர்: அரியலூரில் செஷன்ஸ் (மாவட்ட அமர்வு) நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் உள்துறை செயலாளர் ரமேஷ் ராம் மிஸ்ரா வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய பரிந்துரை கடிதம் மற்றும் கடந்த ஃபிப்ரவரி 24ம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பில் வெளியிடப்பட்ட 143ம் எண்ணுள்ள அரசாணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அரியலூர் மாவட்டத்துக்கான அமர்வு நீதிமன்றம், அரியலூரில் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கான மாவட்ட நீதிபதி நியமிக்கப்பட்டு, அவர் பதவி ஏற்கும் நாள் முதல், அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் செயல்பட துவங்கும். அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நிர்வாக எல்லைக்குள், அரியலூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை தாலுகா பகுதிகள் மற்றும் அரியலூர் சார்பு நீதிமன்றம், அரியலூர் ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்றங்கள் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றங்கள் அடங்கும்.மேலும், அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அதிகாரம் சார்ந்த 'ரிசீவர்' ஒருவரும் நியமிக்கப்படுவார்.இதுபற்றிய உத்தரவு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், அரசிதழ் வெளியிடும் பிரிவு செயலாளர், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் அமர்வு நீதிபதி, சென்னையிலுள்ள தனிக்கைத்துறையின் முதன்மை கணக்காளர், மாநில கருவூல அதிகாரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கருவூல அதிகாரிகள், அரியலூர் துணை கருவூல அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை