அரியலுார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அடிப்படை வசதி செய்து தர நடவடிக்கை
பெரம்பலுார்:அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்த தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.அரியலுார் மாவட்டம், தா.பழூர் அடுத்த கோட்டியால் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்து, பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: தமிழக வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில், பல்வேறு சேவை துறைகளை ஒருங்கிணைத்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. சென்ற ஆண்டு உலகத்தின் 80 சதவீத நாடுகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்தது. ஆனால், தமிழக அரசின் தீவிர முயற்சி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அதேபோல் இவ்வாண்டும் வரலாற்றிலேயே முதல்முறையாக டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் புல்டாக் என்ற நுாடுல்ஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்திருப்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புல்டாக் உணவு 800 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த உணவு பொருள்கள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . ஆய்வு முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்த போது தான் மருத்துவ காப்பீடு திட்டம் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை ஒருங்கிணைத்து தற்போது மத்திய அரசு காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், மாநில அரசு ரூ.4 லட்சமும், மத்திய அரசு ரூ.1 லட்சமும் என ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது.அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.பின், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.