கிளாம்பாக்கம் நடைமேம்பால பணியில் மாற்றம்: ஐகோர்ட் அதிரடி: செங்கை கலெக்டர் பிறப்பித்த அறிவிப்பு ரத்து
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே, நடைமேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் அறிவிப்புகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சட்ட விதிமுறைகளை பின்பற்றி நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடரவும் அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரின், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில்,புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது.இந்நிலையில், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்வதில், பொதுமக்கள்அதிக சிரமத்தை எதிர் கொண்டு வந்தனர். இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கி, கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம் பாலம் அமைக்க முடிவுசெய்யப்பட்டது.சி.எம்.டி.ஏ., போக்குவரத்து குழுமமான 'கும்டா' இணைந்து, இதற்கான பணிகளை மேற்கொண்டன. இங்கு, 1,312 அடி நீளத்துக்கு, 74.50 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு, மார்ச் 24ல், இதற்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.புதிய நடைமேடை மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்காக, அப்பகுதியில் ஒரு ஏக்கர் 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, கடந்தாண்டு ஜனவரி 6ல், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஆட்சேபங்களும் கோரப்பட்டன.ஆட்சேபங்கள் தெரிவிப்பதற்கான கால அவகாசம்முடியும் முன், பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுகிறது என, கடந்தாண்டு ஜூன் 17ல் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த அறிவிப்பை எதிர்த்து, 'பிரீமியம் லெதர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களான தி.மு.க., எம்.பி., எஸ்.ஜெகத்ரட்சன் மற்றும் ஜே.ஸ்ரீனிஷா, ஜெ.ஜெ சுந்தீப் ஆனந்த் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, நீதிபதிஎன்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சட்டப்படி, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, முதல் அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் தான் வெளியிட வேண்டும். ஆனால், செங்கல்பட்டு கலெக்டர், மாவட்டஅரசிதழில் இந்தஅறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பொதுமக்களின் ஆட்சேபங்களை கேட்ட மாவட்ட கலெக்டரே, நிலம் பொது பயன்பாட்டுக்கு தேவைப்படுகிறது என, அறிவிக்க முடியாது.இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டத்தில் கூறப்பட்ட விதிமுறைகள்முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கலெக்டரின் இரு அறிவிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.