100 சதவீத மானியத்தில் பழ மரக்கன்றுகள் அச்சிறுபாக்கம் விவசாயிகளுக்கு அழைப்பு
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதுகுறித்து, அச்சிறுபாக்கம் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் திரிபுரசுந்தரி கூறியதாவது:அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 12 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம். இதில், பாதிரி, கீழாமூர், மாத்துார், புறங்கால், அனந்தமங்கலம், மின்னல் சித்தாமூர், ஆத்துார், எடையாளம், ஆலப்பாக்கம், மோகல்வாடி, பொற்பனங்கரணை, தொழுப்பேடு ஆகிய ஊராட்சிகள் உள்ளன.இத்திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்திற்கு, ஐந்து வகையான பழ மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதில், மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி மற்றும் சீதா பழ மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.இந்த பழ மர தொகுப்பின் முழு விலை 200 ரூபாய். இதில், 150 ரூபாய் மானிய தொகையாக வழங்கப்படுகிறது. விவசாயிகள், 50 ரூபாய் கொடுத்து, ஐந்து பழ மர கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் வாயிலாக, பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு மா, கொய்யா உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.ஏக்கர் ஒன்றுக்கு, 156 மாங்கன்றுகள், 276 கொய்யா கன்றுகள் வழங்கப்படுகின்றன. வெண்டை மற்றும் தர்பூசணி விதைகள், 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன.சிறு, குறு விவசாயிகள் சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், அடங்கல் ஆகியவற்றை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.