கிளாம்பாக்கத்தில் இருந்து 1.20 லட்சம் பேர் பயணம்
கூடுவாஞ்சேரி,:சென்னையில் வசிக்கும், தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை தங்களது சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு,நேற்று முன்தினம் இரவு குவிந்தனர். விடிய, விடிய வந்த பயணியருக்கு, சிறப்பு பேருந்து வாயிலாக அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். கிளாம்பாக்கம் பேருந்து முனைய முதன்மை அதிகாரி பார்த்திபன் கூறியதாவது:வார விடுமுறை நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பயணியர் அதிகளவில் குவிந்தனர்.குறிப்பாக விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் 1,126 பேருந்துகள் இயக்கப்படும். நேற்று முன்தினம் 837 கூடுதல் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் என, மொத்தம் 2,563 பேருந்துகள் இயக்கப்பட்டன-.நேற்று முன்தினம் மட்டும் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணியர் சிறப்பு பேருந்துகள் வாயிலாக பயணித்துள்ளனர்.மேலும், பயணியர் வருகையை கணக்கிட்டு, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பணிகளை, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் மற்றும் கிளாம்பாக்கம் போலீசார் இணைந்து செய்திருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை, சிறப்பு பேருந்துகள் வர தாமதமானதால், அதிகாரிகளுடன் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.அதேபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணியருக்கும், அனைத்து மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.