செய்யூர் நுகர்பொருள் சேமிப்பு கிடங்கில் விபத்து அபாயம்
செய்யூர், செய்யூர் பகுதியில் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் நுகர்பொருள் வாணிபர் கழக சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.இப்பகுதி மக்களுக்கு நல்லுார் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.தேவராஜபுரம் பகுதி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்வினியோகம் செய்ய நுகர்பொருள் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள், பழுதடைந்து சிமென்ட் கலவைகள் உதிர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்து எலும்புக் கூடுபோல காட்சியளிக்கிறது, பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து மின்மாற்றி சாய்ந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் தற்போது வரை மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.