காது, மூக்கில் ரத்தத்துடன் கார் ஓட்டுநர் மர்ம மரணம்
சென்னை, சேலையூர் அடுத்த கேம்ப்ரோடு அருகே உள்ள காலி மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த ஒரு காரின் பின் இருக்கையில், மூக்கு மற்றும் காதில் ரத்தம் வழிந்த நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக, அப்பகுதிவாசிகள் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், இறந்த நபர், ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.டி., சேதுராஜபுரத்தைச் சேர்ந்த அசோக், 32, என்பதும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. தற்போது, சேலையூரில் வீடு எடுத்து தங்கி, தனியார் நிறுவனத்தில் கார்ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார்.இந்த நிலையில், அசோக் நேற்று முன்தினம் இரவு, மற்றொரு நபருடன் சேர்ந்து மது அருந்தியதுதெரியவந்துள்ளது. அசோக் உடன் மது அருந்தியநபர் யார், அதிகளவில் மது அருந்தியதால் உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட கோணங்களில், போலீசார் விசாரிக்கின்றனர்.