கடலுாரில் விவசாய நிலங்களை சேதமாக்கும் கால்நடைகள்
கூவத்துார்,கூவத்துார் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கடலுார்,காத்தான்கடை, அடையாளச்சேரி, குண்டு மணிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாகும்.இப்பகுதியில் பருவத்திற்கு ஏற்ப 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், மணிலா, தர்பூசணி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. தற்போது சம்பா பருவத்தில் நெல் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் இரவு நேரத்தில் கால்நடைகள் பயிரிடப்பட்டுள்ள வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கூவத்துார் பகுதிவாசிகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட மாடுகள், கடலுார் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் தர்பூசணி பயிரை இரவு நேரத்தில் நாசம் செய்து வருகிறது.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 ஆயிரம் வரை செலவு செய்து தர்பூசணி விவசாயம் செய்து வருகிறோம்,பத்து நாட்களில் அறுவடை செய்யும் நிலையில் உள்ள தர்பூசணியை, இரவு நேரத்தில் கால்நடைகள் விளைநிலத்தில் புகுந்து தர்பூசணியை உடைத்து,கொடிகளை நாசம் செய்கிறன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக கட்டி பராமரிக்காமல் அலட்சியமாக இருப்பதால், பகல் நேரத்தில் சாலையில் உலா வருகிறது. இரவு நேரத்தில் விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன.எனவே மாவட்ட நிர்வாகம், கூவத்துார் பகுதியில் கால்நடை வளர்ப்பவர்களுடன் கூட்டம் நடத்தி கால்நடைகளை கட்டுப்படுத்தவும், மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.