தாம்பரம் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற அமைக்கப்பட்ட குழு துாக்கம்
தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளது. இம்மாநகராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன.இவற்றில், ஜி.எஸ்.டி., தாம்பரம் - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம் - திருநீர்மலை, பல்லாவரம் - குன்றத்துார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில், ஆக்கிரமிப்பு என்பது, அகற்ற முடியாத ஒன்றாக மாறிவிட்டது.அந்த அளவிற்கு சாலையோர ஆக்கிரமிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறையவில்லை.குறிப்பாக, காந்தி சாலை சிக்னல் முதல் மெப்ஸ் சிக்னல் வரை, ஜி.எஸ்.டி., சாலையின் பெரும்பகுதி ஒர்க் ஷாப் கடைக்காரர்களின் பிடியில் சிக்கியுள்ளது.இதை நிரந்தரமாக அகற்ற, எந்த அதிகாரிக்கும் தைரியம் இல்லை.மற்றொரு புறம், மாநகராட்சியில் உள்ள காந்தி, ராஜாஜி, கடப்பேரி, ராஜேந்திர பிரசாத், ராதா நகர், தர்கா, ராஜகீழ்ப்பாக்கம் - மாடம்பாக்கம், மகாலட்சுமி நகர் - சிட்லப்பாக்கம் உள்ளிட்ட உட்புற சாலைகளிலும், சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன.இதனால், இச்சாலையில், 'பீக் அவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.மாநகராட்சியில், சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து, அவற்றை அகற்ற ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு செயல்படுகிறதா, இல்லையா என்பது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.அதனால், இப்பிரச்னையில் மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, செயல்படாமல் உள்ள குழுவை தட்டி எழுப்பி, முக்கிய சாலை மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை, எவ்வித சமரசமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.