நல்லுார் ஏரியில் விதிமீறி மண் எடுக்கப்படுவதாக புகார்
செய்யூர், மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, செய்யூர் பகுதியில் நடந்து வருகிறது.சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்களில், பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், அரசு அனுமதியுடன் மண் எடுத்து வரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.செய்யூர் அடுத்த நல்லுார் கிராமத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, சில வாரங்களாக நடந்து வருகிறது.அரசு, 1 மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே, பரவலாக மண் எடுக்க வேண்டும் என, அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மண் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், அரசு அனுமதித்த அளவை விட, மூன்று மடங்கு அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், ஏரியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும். அதிக ஆழம் எடுக்கப்பட்டுள்ள பள்ளத்தால், மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.அது மட்டுமிமழை காலத்தில் ஏரிக்கு வரும் தண்ணீர், விவசாய நீர் பாசனத்திற்காக, மதகுப் பகுதிக்கு செல்லாமல், ஏரியிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசு அனுமதித்த அளவை விட, அதிக அளவில் மண் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.