திருப்போரூரில் சீமான் பேரணி நிபந்தனையுடன் கோர்ட் அனுமதி
திருப்போரூர்:திருப்போரூர் பகுதியில் பஞ்சமி நிலம் மீட்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என்ற தலைப்பில், வரும் 16ம் தேதி அமைதிப் பேரணி நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடாரஹீம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.திருப்போரூர் இள்ளலுார் சாலை சந்திப்பில் இருந்து ஓ.எம்.ஆர்., சாலையில், திருப்போரூர் ரவுண்டானா வரை பேரணி சென்று, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, திருப்போரூர் போலீசில் கடந்த 5ம் தேதி, அக்கட்சி மாவட்ட செயலர் சசிகுமார் மனு அளித்துள்ளார்.இதற்கு அனுமதி மறுத்து, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.இதையடுத்து, கடந்த 10ம் தேதி, நாம் தமிழர் கட்சி சார்பில், பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.நேற்று முன்தினம் இதை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நேற்றைக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.இந்த பேரணி, பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறைக்கு 25,000 ரூபாய் வழங்க, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சசிகுமாருக்கு உத்தரவிட்டார்.இதற்கு ஆட்சேபனை எழுந்ததால், இந்த உத்தரவை நீதிபதி நீக்கினார்.இனி வரும் காலங்களில், பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க கட்டணத் தொகையை நிர்ணயம் செய்து, கட்சிகளிடம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.