சாலை நடுவே அபாய பள்ளம் 2 மாதமாக அதிகாரிகள் மவுனம்
மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி, 8வது வார்டில் உள்ள காந்தி நகரில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள முக்கிய சாலையோரங்களில், மழைநீர் வடிகால்வாய்கள் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.அடிகளார் சாலையில் இருந்து காந்தி நகர் செல்லும் பிரதான சாலையில், மழைநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிமென்ட் கான்கிரீட் தளத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இந்த சாலை வழியாக, இரவு நேரத்தில் செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை கடந்தும், தற்போது வரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இச்சாலை வழியாக, அதிகளவில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சென்று வருகின்றனர். சமீபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். எனவே, சாலை நடுவே உள்ள பள்ளத்தை சரிசய்ய, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.