மறைமலை நகர்:தமிழகம் முழுதும் லோக்சபா தேர்தல், நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தல் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்களை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் பணம் பட்டுவாடா நடந்தது.ஆப்பூர் கிராமம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமியின் சொந்த ஊர். இவர், நேற்று இங்கு உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டு செலுத்தினார்.மேலும், வரலட்சுமியின் கணவரின் சகோதரர் சந்தானம், இதே கிராமத்தை சேர்ந்தவர். இவர் காட்டாங்கொளத்துார் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலராக உள்ளார்.பிரசாரத்தின் போது, ஒரு ஓட்டு கூட இரட்டை இலைக்கு இந்த கிராமத்தில் இருந்து செல்லக்கூடாது என கூறி ஓட்டு கேட்டனர்.இந்நிலையில், இந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் மாலை முதல், தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு 200 ரூபாய் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டது.இதைக் கண்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த உள்ளூர் பிரமுகரும், கவுன்சிலரின் கணவருமான சிவக்குமார், ஓட்டுக்கு 200 ரூபாய் வீதம், அனைவருக்கும் தனது பணத்தை வினியோகம் செய்தார்.செங்கல்பட்டு தொகுதியில் மற்ற எந்த கட்சியினரும், எந்த இடத்திலும் பணம் வினியோகம் செய்யப்படாத நிலையில், எம்.எல்.ஏ.,வின் சொந்த ஊரில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும் என்ற நோக்கில், கடைசி நேரத்தில் ஓட்டுக்கு பணம் அளிக்கப்பட்டது.அவர்களுக்கு போட்டியாக, அ.தி.மு.க.,வினரும் ஓட்டுக்கு பணம் அளித்ததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.இரு கட்சினரும் பணம் கொடுப்பதை, தேர்தல் பறக்கும் படையினர் கண்டுகொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.