மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தொடரும் பணியாளர் பற்றாக்குறை அரசு செயலரிடம் மருத்துவர்கள் புகார்
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனையில், சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில், நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதந்தோறும், 45 முதல் 50 பிரசவங்கள் நடக்கின்றன.மருத்துவமனையில் பொதுநலம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, முட நீக்கியல் மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய, 32 மருத்துவ பணியாளர்களில், 18 காலி பணியிடங்கள் உள்ளன. மீதமுள்ள மருத்துவ பணியாளர்களில், 3 பேர் தினசரி விடுப்பில் செல்கின்றனர்.இதனால், 10க்கும் குறைவான மருத்துவ பணியாளர்களை கொண்டு, சரி வர நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்குவதிலும், சிகிச்சை நேரங்களில் மருத்துவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.இந்நிலையில், அரசு துணை செயலர் பிரதாப், நேற்று முன்தினம் இங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகளை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது குறித்து, மருத்துவர்களிடம் விசாரித்தார்.போதுமான எண்ணிக்கையில் மயக்கவியல் மருத்துவர்கள் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக, பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.பின், வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவு, மாத்திரை வழங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். இரவு நேரங்களில், மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.இது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மருத்துவர்களிடம் அரசு செயலர் தெரிவித்தார். இந்த ஆய்வு பணியின் போது, மாவட்ட திட்ட இயக்குனர் அனாமிகா மற்றும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.