கொடூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் காத்திருப்பு
செய்யூர்,:செய்யூர் அருகே கொடூர் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயமே கிராம மக்களின் பிரதான தொழில்.கிராமத்தில் உள்ள ஏரி நீர் பாசனம் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அதிகளவில் சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது.அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்த நெற்களம் இல்லாததால், ஆக்கினாம்பட்டு மற்றும் சீக்கனாங்குப்பம் செல்லும் பிரதான சாலைகளில் நெல்லை உலர்த்தி வருகின்றனர். இது, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:எங்கள் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம். அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்துவதற்கு களம் இல்லாததால், சாலையில் உலர்த்தி வருகிறோம். அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, எங்கள் கிராமத்திற்கு விரைவில் நெற்களம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.