| ADDED : ஜூலை 15, 2024 05:49 AM
திருப்போரூர் : திருப்போரூர் காவல் நிலையத்தில், ஆதார் இணைப்பில் அரசு வேலை என்று வருவதால், அரசு நலத் திட்டங்களை பெற முடியவில்லை என, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:திருப்போரூர் அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தில், சிட்கோ தொழிற்பேட்டை வளாகம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட உயிர்காக்கும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சிட்கோ வளாகத்தில் அரசுக்கு சொந்தமான 'டாம் கால்' நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில், பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறோம்.இந்நிலையில், தொழிலாளர்களின் ஆதாரில் தமிழ்நாடு அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், ஒய்வூதியம் பெறும் நபர்கள் என, ஆன்லைனில் வருவதால் மகளிர் உரிமைத்தொகை, கல்வி ஊக்கத்தொகை, விதவை உதவித்தொகை உட்பட பல்வேறு அரசு திட்டங்கள், சலுகைகள் கிடைக்கவில்லை. இதற்கு, தனியார் நிறுவனம் மற்றும் ஒப்பந்த நிறுவனம் தான் காரணம் என தெரியவந்தது. இதுதொடர்பாக, சில மாதங்களுக்கு முன், சிட்கோ வளாகத்தில் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற போலீசார், சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.