செங்கையில் விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்க குழு அமைப்பு மாமல்லை, வடபட்டினத்தில் கரைக்க அறிவுறுத்தல்
செங்கல்பட்டு, : செங்கல்பட்டு மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்.பி., சாய் பிரணீத், சப்- - கலெக்டர் நாராயணசர்மா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:விநாயகர் சிலை நிறுவுவதற்கான அனுமதி வழங்குவதற்கு, செங்கல்பட்டு சப்- - கலெக்டர், மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில், வருவாய், காவல் துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான விண்ணப்பம் செய்வோருக்கு, உடனடியாக பரிசீலனை செய்து, அனுமதி வழங்க வேண்டும். சிலைகள் கரைக்கும் பகுதியில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க, மருத்துவத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழா தொடர்பாக, சிலை அமைப்பாளர்கள் தகவல்களை தெரிவிக்கலாம். சிலைகள் வைக்கும் இடங்களில், தன்னார்வலர்கள் இரண்டு பேர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வேண்டும். எஸ்.பி மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை கண்காணிப்பர். இவ்வாறு அவர் பேசினார்.சிலை நிறுவப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில், தீ தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை, தீயணைப்புத் துறையினர் உறுதி செய்ய வேண்டும். சிலை கரைக்கும் பகுதியில், தாசில்தார், துணை தாசில்தார் நிலையில், கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டு பகுதிகள் அருகில், சிலைகள் நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. அரசியல் கட்சியினர் புகைப்படத்துடன் விநாயகர் சிலை நிறுவுவது, விளம்பர பேனர் வைப்பது கூடாது. சிலை ஊர்வலத்திற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது. வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில், விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது.நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்கள், www.tnpcb.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளது.களிமண்ணால் செய்யப்பட்டதும், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.சிலைகளில், உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே, சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு, நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது, எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள திருக்கழுக்குன்றம் தாலுகாவில், மாமல்லபுரம் கடற்கரை மற்றும் செய்யூர் தாலுகாவில் வடபட்டினம்குப்பம் ஆகிய பகுதிகளில் கரைக்க வேண்டும்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும்.
சிங்கபெருமாள் கோவிலில் சிலை விற்பனை
செங்கை புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், விநாயகர் சிலை தயாரித்து, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இங்கு தயாரிக்கப்படும் சிலைகளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்கின்றனர்.மூன்று முக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயண விநாயகர், கற்பக விநாயகர், சிவன், பார்வதி விநாயகர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, சிங்கபெருமாள் கோவில், திருத்தேரி பகுதியில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு உள்ள ஏகாம்பரம் என்பவர் கூறியதாவது:கழங்கு மாவு, பேப்பர் மாவு, ஜவ்வரிசி, சுண்ணாம்பு கல் உள்ளிட்ட பொருட்களுடன் களிமண் சேர்த்து, சிலைகள் செய்து வருகிறோம். இயற்கை மூல பொருள்களால் செய்யப்படும் சிலைகள் என்பதால், நீர்நிலைகளில் கரைக்கும் போது, தண்ணீர் மாசு அடையாது.கடந்த 16 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான சிலைகள் செய்துள்ளோம். ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் செய்யப்படுகின்றன. 100 ரூபாயில் இருந்து 30,000 ரூபாய் வரை சிலைகள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக, மூல பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.