ஸ்பீக்கர் பயன்படுத்தும் சர்வதேச சுற்றுலா பயணியர்
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், குழுவினராக திரளும் சர்வதேச பயணியர், சிற்பங்கள் குறித்து வழிகாட்டி விளக்குவதை இடையூறின்றி கேட்க, பிரத்யேக 'மைக்' சாதனம் பயன்படுத்துகின்றனர்.மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடவரைகள் ஆகிய பாரம்பரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றை காண, இந்திய பயணியர் ஆண்டு முழுதும் சுற்றுலா வருகின்றனர். சர்வதேச பயணியர் அவரவர் நாட்டு தட்பவெப்ப சூழல், விடுமுறை நிலைக்கேற்ப, இந்தியாவிற்கு சுற்றுலா வருகின்றனர்.ஓராண்டில், நவம்பர் -- மார்ச் மாதங்களில், தென்னிந்திய சுற்றுலா பகுதிகளை காண, ஏராளமானோர் திரள்கின்றனர். குறிப்பாக, மாமல்லபுரம் சிற்பங்களை காண்கின்றனர். இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர் சந்திப்பு, இங்கு நடத்தப்பட்ட சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, 'ஜி - 20' நாடுகளின் மாநாடுகள் ஆகியவற்றால், மாமல்லபுரம் மேலும் உலகை கவர்ந்துள்ள நிலையில், சர்வதேச பயணியர் தற்போது அதிகரிக்கின்றனர்.இப்பயணியர்,சிற்பங்களை பொழுதுபோக்காக மட்டுமே காணாமல், கலை ஆர்வத்துடன் ரசிக்கின்றனர். வழிகாட்டி ஒருவரை அமர்த்தி, சிற்பக்கலை நுட்பம், சரித்திர பின்னணி உள்ளிட்ட விபரங்களை அறிந்து வியக்கின்றனர்.தற்போது சுற்றுலா நிறுவனங்கள் வாயிலாக, பயணியர் குழுவினராக அதிகம் வருகின்றனர். அவர்கள், வழிகாட்டி கூறுவதை, கூட்ட நெரிசல் சத்தம் இடையூறின்றி கேட்க கருதி, 'மைக்' சாதனத்தை பயன்படுத்துகின்றனர்.அனைவருக்கும், தனித்தனி 'மைக்' சாதனம் வழங்கப்படுகிறது.பயணியர் குறிப்பிட்ட தொலைவிற்குள் நின்று, வழிகாட்டி விளக்குவதை, பிற சத்தமின்றிசாதனம் வாயிலாக கேட்டறிகின்றனர்.