| ADDED : ஏப் 10, 2024 09:34 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் ரயில் நிலையத்தை, சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.தென் மாவட்டங்களிருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில்கள், விழுப்புரம் -- தாம்பரம் பயணியர் ரயில், பாண்டிச்சேரி விரைவு ரயில் என இரு மார்க்கத்திலும் செல்லும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.இந்த ரயில் நிலையத்தை கிராமப்புறங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு, பயணிருக்காக என்.எல்.சி., நிர்வாகத்தின்சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமலேயே பாழடைந்து வருகிறது. இதனால், பயணியர் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். பலர், ரயில் நிலையத்தின் அருகே உள்ள காலி இடத்தில், திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பராமரிப்பு பணியை மேற்கொண்டு, கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்காக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.