போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்த நபர் கைது
குரோம்பேட்டை,:குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், பல்லாவரத்தைச் சேர்ந்த சஞ்சய், அனகாபுத்துார் ரபீக் என்பதும், லட்சுமிபுரம், பாரதிதாசன் தெருவை சேர்ந்த விஜய், 28, என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி வந்ததும் தெரியவந்தது.போலீசார், விஜய் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி, 200 கிராம் கஞ்சா, 225 போதை மாத்திரைகள், 36,000 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய், ஆறு ஆண்டுகளாக இப்பகுதியில் வசிப்பதும், போதை மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி, தெரிந்தவர்களுக்கு மொபைல் போன் வாயிலாக விற்பதும் தெரிந்தது. விஜயை, போலீசார் கைது செய்தனர்.