மேலும் செய்திகள்
இ.சி.ஆர்., சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
27-Feb-2025
மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கதிரியக்கம் ஏற்படும் அவசர காலத்தில் வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதிவாசிகள் விரைந்து வெளியேற, பகிங்ஹாம் கால்வாயில் பாலம், புதுச்சேரி சாலையுடன் இணைப்பு சாலை அமைக்க வேண்டுமென, அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம், சென்னை அணுமின் நிலையம் உள்ளிட்டவை இயங்குகின்றன.அணுமின் நிலையத்தில் கதிரியக்கம் ஏற்பட்டு, அந்த வளாகத்திற்கு வெளியேயும் பரவி அவசர நிலை ஏற்பட்டால், சுற்றுப்புற மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகம், அணுமின் நிலைய நிர்வாகத்துடன் இணைந்து, அவசர நிலை ஒத்திகை நடத்தி வருகிறது.அத்தகைய அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் பாதுகாப்பாகவும், விரைந்தும் அங்கிருந்து வெளியேற சாலை, பகிங்ஹாம் கால்வாயில் பாலம் ஆகியவை அவசியம். ஆனால், அணுசக்தி தொழில் வளாகத்தை ஒட்டியுள்ள மாமல்லபுரம் நகராட்சியின் வெண்புருஷம் மற்றும் எடையூர் ஊராட்சியின் கொக்கிலமேடு ஆகிய பகுதிகள், அவசர கால தேவைக்கான சாலை வசதியோ, பகிங்ஹாம் கால்வாயில் பாலமோ இல்லாமல் உள்ளன.வெண்புருஷம் மற்றும் கொக்கிலமேடு ஆகிய இரு பகுதிகளிலும், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு, 3 கி.மீ.,யில் உள்ள மாமல்லபுரத்திற்குச் செல்கின்றனர்.திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லவும், மாமல்லபுரத்தைக் கடந்தே செல்ல வேண்டும்.சாதாரண நேரத்தில் இவ்வாறு செல்வதில் சிக்கல் இல்லை. ஆனால், அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கம் பரவும் அவசர காலத்தில், மாமல்லபுரத்தைச் சுற்றி நெரிசலில் சென்றால், பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்.ஏற்கனவே, மாமல்லபுரத்தில் குறுகிய சாலைகள் உள்ள நிலையில், சுற்றுலா வாகனங்களாலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், இவர்கள் அவசர காலத்தில் இப்பகுதியை கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படும்.பகிங்ஹாம் கால்வாயில், திருக்கழுக்குன்றம் சாலை, புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகியவை குறுக்கிடும் இடங்களில், உயர்மட்ட பாலங்கள் உள்ளன. அவசர காலத்தில் வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதியினர் செல்ல நேரிட்டால், 3 கி.மீ.,யில் உள்ள மாமல்லபுரம் சென்று நெரிசலில் சிக்கி, இந்த பாலங்களை கடந்து வெளியேறுவது பாதிப்பையே ஏற்படுத்தும்.இது ஒருபுறமிருக்க வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதிவாசிகள் கடம்பாடி, புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நீண்ட தொலைவு சுற்றிச் செல்கின்றனர்.கொக்கிலமேடிலிருந்து, 1 கி.மீ., மேற்கில் கடம்பாடி பகுதியில், புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை கடக்கிறது.ஆனால், கொக்கிலமேடில் குறுக்கிடும் பகிங்ஹாம் கால்வாயில் பாலமோ, புதுச்சேரி சாலையை இணைக்கும் சாலையோ இல்லை. மாமல்லபுரம் வழியே, 8 கி.மீ., சுற்றி தான் செல்கின்றனர்.இந்நிலையில், கல்பாக்கத்தில் அவசர நிலை சூழல் ஏற்படும் போது, வெண்புருஷம் மற்றும் கொக்கிலமேடு பகுதிவாசிகள் புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குறுகிய தொலைவில் கடக்க, கொக்கிலமேடு - கடம்பாடி இடையே, பகிங்ஹாம் கால்வாயில் உயர்மட்ட பாலம், புதுச்சேரி சாலை வரை இணைப்புச் சாலை ஆகியவை அமைப்பது, தற்போது அவசியமானதாக உள்ளது.கடம்பாடி துவங்கி, கொக்கிலமேடு பகிங்ஹாம் கால்வாய் வரை, தனியார் நிறுவனத்தின் உப்பளம் உள்ளது.அங்கு வாகன போக்குவரத்திற்காக, தனியார் நிறுவனம் மண்பாதை அமைத்துள்ளது. தமிழக அரசு, கொக்கிலமேடு பகுதி பகிங்ஹாம் கால்வாயில் உயர்மட்ட பாலம், புதுச்சேரி சாலை வரை இருவழி சாலை என அமைத்தால், அவசர காலத்தில் வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதியினர் பாதுகாப்பாக வெளியேறலாம்.இதுமட்டுமின்றி, சுற்றுலா உள்ளிட்ட வாகனங்கள், புதுச்சேரி சாலையிலிருந்து மாமல்லபுரம் வரவும், மாமல்லபுரத்திலிருந்து வெளியேறவும், இத்தடம் குறுகிய தொலைவு கூடுதல் பாதையாகவும் பயன்படும். இத்திட்டத்தை, அணுசக்தி துறை பங்களிப்புடன், தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வெளியேறினால், நாங்கள் விரைந்து வெளியேற வேண்டும். ஆனால், எங்கள் பகுதியில், பகிங்ஹாம் கால்வாயில் பாலம் இல்லை. கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை வரை, சாலை வசதியும் இல்லை. மாமல்லபுரம் சென்று தான், வெளியேறும் நிலை உள்ளது. அவசர காலத்தில் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், பாதிப்பு தான் ஏற்படும். இதை தவிர்க்க, கொக்கிலமேடு - கடம்பாடி இடையே சாலை அமைக்க வேண்டும்.- கொக்கிலமேடு கிராமத்தினர்
27-Feb-2025