கோவில் இடத்தில் கடை வைத்துள்ளோர் வாடகை நிலுவையை செலுத்த நோட்டீஸ்
திருக்கழுக்குன்றம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு சொந்தமாக, திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடம் உள்ளது.திருக்கழுக்குன்றத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில், அடிமனை வாடகை அடிப்படையில், கடைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. குத்தகைதாரர்களும் உள்ளனர். 249க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், பெரும்பாலானோர் வாடகை, குத்தகை செலுத்தாமல், பல ஆண்டுகளாக அலட்சியமாக இருந்து வருகின்றனர்.ஒரு லட்சம் ரூபாய் முதல், பல லட்சம் ரூபாய் வரை, வாடகை, குத்தகை என நிலுவை உள்ளது. அதை செலுத்துமாறு, கோவில் நிர்வாகம், அவர்களுக்கு பலமுறை அறிவிப்பாணை அளித்தும், நிலுவைத் தொகையை செலுத்த யாரும் முன்வரவில்லை.நிலுவை வைத்துள்ள நபர்கள், ஒரு வாரத்திற்குள் செலுத்த அறிவுறுத்தி, கோவில் நிர்வாகம் அறிவிப்பாணை வழங்கியுள்ளது. அதை செலுத்தாவிட்டால், ஹிந்து சமய அறக்கொடைகள் சட்டம் - 1959ன், 78ம் பிரிவின்படி, வாடகைதாரரை வெளியேற்றி, இடத்தை கைப்பற்றி, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துறை அனுமதியுடன் கடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, நிர்வாகத்தினர் கூறியதாவது:இக்கோவில் இடத்தில், வாடகைக்கு உள்ளவர்கள், 50,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை, 59 பேர் நிலுவை வைத்துள்ளனர். 1 லட்சம் ரூபாய் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, 68 பேர் நிலுவை வைத்துள்ளனர்.அது மட்டுமின்றி, 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை, 16 பேரும், 5 லட்சம் ரூபாய்க்கும் மேல், 14 பேரும் என, மொத்தம் 157 பேர் வாடகை நிலுவை வைத்துள்ளனர்.அத்தொகையை செலுத்துமாறு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய்க்கும் குறைவாக நிலுவை வைத்துள்ளோருக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.