கழிவுநீர் குழாய் அடைப்பை அகற்ற 58 ஜெட்ராடிங் வாகனங்கள் கொள்முதல்
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 4,659 கி.மீ., நீளத்திற்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. துார்வாரி அடைப்பு அகற்றும் வகையில், 1.60 லட்சம் கழிவுநீர் 'மேன்ஹோல்' மூடிகள் உள்ளன.இந்த குழாய்களில் அடைப்பு அகற்றுவதற்காக, 399 துார்வாரும் இயந்திரங்கள், 142 அடைப்பு அகற்றும் வாகனங்கள், 35 அடைப்பு நீக்கும் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மற்றும் 63 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் உள்ளன.சில மண்டலங்களில், வாகனங்கள் பற்றாக்குறையால், கழிவுநீர் பிரச்னை அதிகரித்தது. இதையடுத்து, 28.56 கோடி ரூபாயில் கூடுதலாக, 58 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.இதில், 2,000 லிட்டர் கொள்ளளவில் எட்டு உயர் அழுத்த ஜெட்ராடிங் வாகனங்கள்; 8,000 மற்றும் 9,000 லிட்டர் கொள்ளளவில், 20 அதிநவீன கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 1,000 லிட்டர் கொள்ளளவு உடைய 30 கழிவுநீர் துார்வாரும் மினிஜெட்ராடிங் வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன.