தமிழகத்தில் ஏப்., 19ல், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள், பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் களம் இறங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 16 நிலையான கண்காணிப்பு குழு, 16 பறக்கும் படை, 16 வீடியோ கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணமாக 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லையென்றால், அவற்றை பறிமுதல் செய்கின்றனர். இதனால், காய்கறி, நகை, பட்டு சேலை, பாத்திரங்கள் உட்பட சிறு, குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பட்டு சேலைகளின் கேந்திரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில், வியாபாரம் முழுதுமாக முடங்கும் நிலை உருவாகி உள்ளது. தை, பங்குனி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பட்டு சேலை வியாபாரம் அமோகமாக இருக்கும். இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாடுகளால், வெளியூர் வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரம் வருவது குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தோர், அதிக விலை மதிப்புள்ள சேலைகளை வாங்கி செல்வது வழக்கம். காரில் ரொக்கமாக பணத்தை கொண்டு வந்தால், தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வர் என பயந்து, பலரும் வரவில்லை. 'தேர்தல் கெடுபிடியால், 30 கோடி ரூபாய்க்கான வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், உற்பத்தியும் குறைந்து நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர்' என, பட்டு சேலை வியாபாரிகள் தெரிவித்தனர். பெரிய வணிக வியாபாரிகள் தான், ஆவணங்கள் வைத்து பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவர். மிட்டாய் வியாபாரி, காய்கறி வியாபாரி, வாரம், மாதம் தண்டல் விடுபவர்கள் எந்தவித ஆவணமின்றி தான் பணப் பரிவர்த்தனை நடக்கும்.இதே போல, திருமணம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் மணமக்கள் குடும்பத்தினர், பொருட்களை வாங்க பணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர். வணிகர்கள், வியாபாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியாததால், கடையில் இருப்பு குறைந்து வியாபாரம் கெடும் சூழல் உருவாகி உள்ளது.சென்னை, புறநகர்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து, காய்கறி, பழங்கள், பூ மற்றும் உணவு தானிய பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி செல்வர். தேர்தல் விதி காரணமாக, 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து வரமுடியாததால், கோயம்பேடு சந்தைக்கு வருவோர் குறைந்துள்ளனர். இதனால், இறைச்சி, உணவுப் பொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரம் செய்கிறோம். இச்சந்தையில் பதிவு செய்யப்படாத 'பில்' தான் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகவே ஒரு வியாபாரி, 2 லட்சம் ரூபாய் வரை எடுத்து வருவார். எனவே, 50,000 என்ற வரம்பை, 2 லட்சம் ரூபாயாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அதிகளவில் பணம் புழங்கும், பத்திரப்பதிவிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வளர்ச்சியடையும் முக்கிய பகுதிகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., நீலாங்கரை, பள்ளிக்கரணை, திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பத்திரப்பதிவுகள் கணிசமாக குறைந்துள்ளன. பரிமாற்றத்துக்காக எடுத்துச் செல்லும் பணத்தை, தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்வதால், மனை, வீடுகள் வாங்குவதில் விற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவுகளும் வெகுவாக குறைந்துள்ளன.அதேபோல், பெரிய அறுவை சிகிச்சைக்காக 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் செல்வதிலும் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளுக்கு முன், 50,000 ரூபாய் என்பது பெரிய தொகையாக இருந்தது. தற்போது, சர்வ சாதாரணமாக அந்த பணத்தை செலவு செய்வதால், தேர்தல் நடத்தை விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.வியாபாரத்திற்காக அரிசி, காய்கறி, இறைச்சிகளை, எங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்க, ரொக்கமாக பணம் எடுத்துச் செல்கிறோம். அனைத்திற்கும், ஆன்லைன் வர்த்தகம் செய்ய முடியாது. உரிய ஆவணங்களையும் கொண்டு செல்ல முடியாது. திருமணம், திருவிழா போன்ற விசேஷ நாட்களில் நடக்கும் வியாபாரத்திற்காக, தேவையான பொருட்களை, மொத்தமாக வாங்க சென்றால், தேர்தல் நன்னடத்தை விதியை காட்டி, எங்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்வது என்ன நியாயம்? ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எங்களை போன்ற வியாபாரிகளின் நிலைதான் நெருக்கடியாகி விடுகிறது.எஸ்.ஜீலான் பாஷா, 40,திருவள்ளூர் தெற்கு மாவட்ட வணிகர் சங்க பொருளாளர், செங்குன்றம்.தேர்தல் நடத்தை விதிமுறைகளால், எங்களை போன்ற கட்டுமான தொழில் செய்வோர், ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியவில்லை. சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்றால், பணிகளில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும். குறைந்தபட்சம், கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல், ஒவ்வொரு நாளும் சிரமமாக உள்ளது.- ஜெ.ஜெயகுமார், 59,கட்டுமான தொழில், பட்டாபிராம்.- நமது நிருபர் குழு -