புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை நிலமட்டத்திற்கும் மேல் உயர்வு
மாமல்லபுரம் : தமிழக நெடுஞ்சாலைத் துறையின்கீழ், சென்னை - புதுச்சேரி இடையே, கிழக்கு கடற்கரை சாலை இருந்தது. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், முதலில் சென்னை - மாமல்லபுரம் இடையே மட்டும் அமைக்கப்பட்டது.நாளடைவில், கடலோர பகுதிகள் போக்குவரத்து கருதி, மாமல்லபுரம், புதுப்பட்டினம், கூவத்துார், இடைக்கழிநாடு, மரக்காணம் என, புதுச்சேரி வரை, கடலோர சாலையாக நீட்டிக்கப்பட்டது.அப்போது, நிலமட்டத்திற்கும் மேல், அதிகம் உயர்த்தப்படாத ஒருவழிப்பாதையாக அமைக்கப்பட்டது. சென்னை - புதுச்சேரி போக்குவரத்தை மேம்படுத்த கருதிய அரசு, 1998ல் இருவழிப் பாதையாக மாற்றியது.புதிய தடம், கனரக வாகன போக்குவரத்திற்கேற்ப, நிலமட்டத்தின்கீழ் சற்று ஆழமான பள்ளம் தோண்டி, கிராவல் அடுக்கு, அதற்கு மேல் ஜல்லிக்கற்கள் அடுக்கு, மேற்புறம் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இயல்பான நில மட்டத்திற்கு சற்று உயரத்தில், இச்சாலை அமைந்தது. அதன்பின், கடந்த 2002ல், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், இச்சாலையை கொண்டுவந்து மேம்படுத்தி, சுங்கக் கட்டண சாலையாக நிர்வகிக்கப்பட்டது. இந்நிறுவனம், சாலையை மட்டும் பெயர்த்து, புதிய சாலை அமைத்தது.இத்தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி, கடந்த 2018ல், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்படுகிறது.முந்தைய இருவழிப் பாதையை பெயர்த்து, இட சூழலுக்கேற்ப, அதன் இடது, வலது புறங்களில் விரிவுபடுத்தி, புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.புதிய சாலை இயல்பான நில மட்டத்திற்கும் மேல், பல அடி உயர்ந்துள்ளது. மாமல்லபுரம் - புதுப்பட்டினம் இடையே, உயரம் குறைவாக இருந்த பழைய சாலையிலிருந்து, கல்பாக்கம் அணுசக்தி தொழில் வளாகத்தை காண இயலாது. தற்போது சாலை உயர்ந்ததால், வாகன பயணியர், இவ்வளாகத்தை எளிதில் காண முடிகிறது.