உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க க்யூ.ஆர்., குறியீடு வசதி

சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க க்யூ.ஆர்., குறியீடு வசதி

மாமல்லபுரம் : மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க, க்யூ.ஆர்., குறியீடு நடைமுறைப்படுத்த, சப் - கலெக்டர் நாராயணசர்மா அறிவுறுத்தினார்.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை காண, சுற்றுலா பயணியர் வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், பயணியர் பயணிக்கும் சுற்றுலா வாகனத்திற்கு, நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.ஆண்டுதோறும், ஏப்., 1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, கட்டணம் வசூலிக்க பொதுஏலம் நடத்தி, தனியாரிடம் உரிமம் வழங்கும்.இந்தாண்டு லோக்சபா தேர்தல், நகராட்சி நிர்வாகத் துறை அனுமதி அளிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகிய காரணங்களால், பொது ஏலம் நடத்தப்படவில்லை. ஊழியர்கள் வாயிலாக, நிர்வாகமே வசூலிக்கிறது. கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை ஆகிய இடங்களில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில், வாகனங்கள் குவிகின்றன. ஊழியர்கள் வாகனங்களை மறித்து நிறுத்தி, நுழைவு கட்டணம் வசூலிக்கின்றனர்.கட்டணம் செலுத்த, க்யூ.ஆர்., குறியீடு வசதி உள்ள தற்காலத்திலும், பேரூராட்சி நிர்வாகம் பணமாக மட்டுமே வசூலிக்கிறது. இதற்காக, வாகனங்கள் தொடர்ச்சியாக நின்று தேங்குவது, சில்லறை பாக்கி தருவதில் தாமதம் ஆகிய பிரச்னைகளால், நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து தடைபடுகிறது.இதையறிந்த சப் - கலெக்டர் நாராயணசர்மா, க்யூ.ஆர்., குறியீடு வாயிலாக நுழைவுக்கட்டணம் வசூலிக்க, பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !