திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய முள்ளிப்பாக்கம் கிராமத்திற்கு, திருவான்மியூரிலிருந்து, தடம் எண் 523 என்ற மாநகர பேருந்து இயக்கப்படுகிறது.இப்பேருந்து, சோழிங்கநல்லுார், கேளம்பாக்கம், திருப்போரூர், கொட்டமேடு வழியாக முள்ளிப்பாக்கம் வருகிறது.இதில், 3 கி.மீ.,ல் உள்ள பெரியவிப்பேடு கிராமம் வரை, மேற்கண்ட பேருந்தை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:பெரியவிப்பேடு கிராமத்தில், 2,000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே பிரதான தொழில். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, நகரப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.ஆனால், நகர பேருந்து வசதி இல்லாததால், நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு இப்பகுதி கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எங்கள் கிராமத்தில், தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க செல்லும் மாணவர்கள், நடந்தும், மிதிவண்டியிலும் செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது.வேலைக்கு செல்லும் இளைஞர்கள், நகர பேருந்து இல்லாமல் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து பணிமனைக்கு கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம்.எனவே, திருவான்மியூர் -- முள்ளிப்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்: 523 பேருந்து சேவையை, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது, பெரியவிப்பேடு கிராமம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.