மாமல்லை சாலைகளில் மரக்கன்று நட கோரிக்கை
மாமல்லபுரம்:மாமல்லபுரம் சாலை பகுதிகளில், பாரம்பரிய மரக்கன்றுகள் நட்டு, பசுமை சூழலை பெருக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலை சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால பாரம்பரிய நினைவுச் சின்னங்களை உள்நாடு மற்றும் சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். சிற்பங்கள் வெவ்வேறு இடங்களில் உள்ள நிலையில், பாதசாரி பயணியர் நீண்ட துாரம் நடந்தே செல்கின்றனர்.இச்சூழலில், ஆங்காங்கே உள்ள மரத்தின் நிழலில், அவர்கள் இளைப்பாறுகின்றனர். இங்குள்ள கிழக்கு ராஜ வீதி, பழைய சிற்பக் கல்லுாரி சாலை, மேற்கு ராஜ வீதி, ஐந்து ரதங்கள் வீதி உள்ளிட்ட சாலைகளில், போதிய மரங்கள் இல்லை. இந்த சாலைகளில், இருபுறமும் பாரம்பரிய மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்த்தால், பசுமை சூழல் ஏற்படும்.பாதசாரி பயணியர் நிழலில் இளைப்பாறுவர். எனவே, மரக்கன்றுகள் நட்டு, பசுமைச் சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.